“அம்பேத்கர் என்பது பெயர் அல்ல.. ஃபயர்..” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
அம்பேத்கர் புத்தகத்தை 10 பக்கங்கள் படிப்பதற்கு பொறுமை இல்லாதவர்களுக்கு அம்பேத்கர் குறித்து பேசலாமா? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆயிரம் முறை அம்பேத்கர் பெயர் சொல்லும் ஆர்ப்பாட்டம் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் அம்பேத்கர் முகமூடியை அணிந்து கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னிஅரசு, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட மேடையில் திருமாவளவன்,
“தன்னை தானே சாட்டையை எடுத்து அடித்துக்கொள்கிற நடவடிக்கை போல இல்லை அம்பேத்கர் பெயரை சொல்வது. எந்த அளவு அம்பேத்கர் பெயர் அமித்ஷாவிற்கும் அவரை சார்ந்தவருக்கும் எரிச்சலூட்டியிருக்கும் என்பதை உணர முடிகிறது. பட்டேல், ஹெக்டேவர், சாவர்க்கர் போன்ற பெயர்களை சொல்லிருந்தால் எரிச்சல் அடைந்திருப்பார்களா? பாஜகவின் கேடுகாலம் இதிலிருந்து தான் தொடங்குகிறது. அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதால் உங்களுக்கு என்ன எரிச்சல்?
இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களிடம் அம்பேத்கர் பெயரை சொல்லி என்ன பயன், கடவுள் பெயரை சொன்னால் மோட்சம் கிடைக்கும் என அமித்ஷா அறிவுரை சொல்லியிருக்கிறார். கோயிலுக்கு போனால் கடவுள் பெயரை சொல்வது வாடிக்கை. நாடாளுமன்றத்திலே கோவிந்தா கோவிந்தா என எப்படி சொல்ல முடியும்? அம்பேத்கர் குறித்தும் அரசமைப்புச் சட்டம் குறித்தும் அமித்ஷாவுக்கு தெரியாது. அம்பேத்கரை அறிந்து கொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும். அம்பேத்கரை புரிந்து கொள்வதற்கு இந்தியாவில் ஞானத்தகுதி உள்ளவர்கள் குறைவு.
அம்பேத்கர் குறித்து படித்திருந்தால் அமித்ஷாவால் அந்த வார்த்தையை சொல்லியிருக்க முடியாது. அம்பேத்கர் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்தவர் என்று தான் அவர்களுக்கு தெரியும். இந்தியாவில் உயர்ந்த சாதியை சார்ந்தவர்கள் அரசமைப்பு சட்டத்தை எழுதியிருக்க வேண்டியது தானே? அதற்கு ஞானம் தேவை. அம்பேத்கர் குறித்து நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு தேர்வு வைத்தால் தேர்ச்சியடைவார்களா? 133 அதிகாரங்களில் 1330 குறளுக்கும் ஒவ்வொறு நூற்றாண்டுக்கும் பல பேர் மொழி பெயர்ப்பு எழுதி கொண்டே இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு இருந்த ஞானத்தை மதிப்பீடு செய்ய முடியாது.
உலகம் பாராட்டக்கூடிய அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் எழுதியிருக்கிறார் என்றால் அவர் ஞானத்தை மதிப்பீடு செய்ய முடியாது. அரசியலமைப்பின் சொற்கள் பல வரலாறுகளை உடையது. தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை முறை, பேசும் மொழி, மதம், உணவு, உடை, பாரம்பரியம், அரசமைப்புச் சட்ட தொலைநோக்கு பார்வை இருந்தால் தான் அரசமைப்பு சட்டத்தை எழுதியிருக்க முடியும். 7 பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவில் 5 பேர் பிராமணர்கள், 1 தலித், 1 முஸ்லீம். ஆனால் அம்பேத்கர் தான் எழுதினார்.
நடிகர் மாநாடு என்றால் அது ஒரு மாதம் செய்தி. அது ரசிகர் கூட்டம், தொண்டர்கள் கூட்டம் இல்லை. எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதில், பிரதமர் என்று சொல்லியிருக்கலாம் அது தான் நம் திறமைக்கு சரியாக இருக்கும். 1932ல் இரவாடா சிறைச்சாலையில் இருந்த போது காந்தி நல்ல வேலை சாட்டையால் அடித்துக்கொள்ளவில்லை. அம்பேத்கர் என்பது பெயர் அல்ல ஃபயர். அம்பேத்கர் புத்தகத்தை 10 பக்கங்கள் படிப்பதற்கு பொறுமை இல்லாதவர்களுக்கு அம்பேத்கர் குறித்து பேச தகுதி உண்டா?”
இவ்வாறு பேசியுள்ளார்.