அம்பேத்கர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மரியாதை!
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் மரியாதை செய்தார்.
அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கி அவர் 37 ஆண்டுகள் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஏப்ரல் 14 அன்று உலகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
கிராமங்களில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கூறி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நமது அரசியலமைப்பின் சிற்பியும், நமது தேசத்தைக் கட்டமைத்த மகத்தான தலைவர்களுள் ஒருவருமான பாபாசாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த நாளில் நமது நாட்டுமக்களுக்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறும்போது, “டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள். பாரதத் தாயின் புதல்வரான அவர் இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி மட்டும் இல்லை, சமூக நீதிக்காகவும் பாடுபட்டவர்.
சட்டத்தின் ஆட்சி, சமூக உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவைகளை மேம்படுத்து அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம், சமத்துவ இந்தியாவைக் கட்டி எழுப்பும் சமூக மாற்றத்துக்கு வித்திட்ட முன்னோடியாவர். டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களை ஏற்றுக்கொண்டு சமூக நீதிக்கான அவரது பார்வைகளை நினைவாக்க பாடுபடுவோம்” என்று தெரிவித்தார்.