தொழிற்துறையினரின் காப்பீட்டுக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (டிச.13) டெல்லியில் சந்தித்தனர்.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மிக்ஜாம் புயலால் சென்னை மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் (AIEMA) நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அண்மையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய மிக்ஜாம் புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையும் படியுங்கள் : 3வது டி20 : இந்தியா, தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை..!
இதுகுறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: "பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக அதிகப்படியான சர்வேயர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டன. மேலும் உரிமைகோரல்களை எளிதாகவும் துரிதமாகவும் செயல்படுத்த அந்தந்த இடங்களில் சிறப்பு முகாம் வரும் 20 ஆம் தேதி முதல் நடத்தப்படும். மேலும், தகுதி வாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்."
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.