கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!
அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் வழிகளிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காணப்படும். இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை 1.50 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று (ஜுலை 6) அதிகாலை, ஜம்முவில் இருந்து 5,876 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். கனமழை பெய்துவரும் நிலையில், 245 வாகனங்களில் 1,118 பெண்கள், 18 குழந்தைகள் உட்பட மொத்தம் 5, 876 பேர் கிளம்பிச் சென்றனர். இவர்களில் 3,759 பக்தர்கள் பாரம்பரிய பாதையான பஹல்காம் வழியாக அமர்நாத் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மற்றுமொரு பாதையான பால்டால் வழியாக 2, 117 பக்தர்கள் செல்லவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக இவர்கள் இடையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.