இந்திய #Archaeology துறை இயக்குநரானார் அமர்நாத் ராமகிருஷ்ணா!
தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வுகளை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2014ஆம் ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது, கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் கிருஷ்ணா. இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற 3 கட்ட அகழாய்வில், இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் இவர் தலைமையில் கீழடியில் நடைபெற்றன. இவரது தலைமையிலான குழுவினர்தான் கீழடியில் பண்டைய காலத்தில் நிலவிய நகர நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தது.
மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை வெளிக்கொணர்ந்தார். தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானையோடுகள் கண்டறியப்பட்டன. மேலும், உறை கிணறுகள், மட்கலன்கள், சூது, பவள மணிகள் ஆகியவை கண்டறியப்பட்டன.
கீழடி 2ம் கட்ட அகழாய்வின் போது தான் மிக நீண்ட குழி ஒன்றில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், தொல்லியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அந்த அகழாய்வே கீழடியின் நிலவிய பண்டைய நகர நாகரீகத்திற்கு சான்றாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தனது பணியை அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.