10 மணிநேரத்தில் 4.6 கிலோவை குறைத்த அமன் ஷெராவத்! எப்படி தெரியுமா?
57 கிலோ உடல் எடைப் பிரிவில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்துக் காட்டி அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ஆம் தேதி ஒலிம்பிக் தொடர் தொடங்கியது. அப்போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் செயல் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத், போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸை 13-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டிக்கு முந்தைய நாள் வியாழன்கிழமை அமன் ஷெராவத்தின் எடை 61.5 கிலோவாக இருந்தது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட 57 கிலோ எடைப்பிரிவிற்குத் கூடுதலாக 4.5 கிலோ இருந்துள்ளது. இதனையடுத்து 10 மணி நேரத்தில் தனது எடையை 57 கிலோவாக குறைத்தார்.
இது எப்படி சாத்தியம்?
உடல் எடையில் சமச்சீரற்ற தன்மையை சரி செய்யும் Muscle Activation Techniques அதாவது MAT எனப்படும் பயிற்சி உத்தியை பயிற்சியாளர்கள் மேற்கொண்டனர். இதன்படி இரண்டு மூத்த பயிற்சியாளர்கள் ஸ்டாண்டிங் ரெஸ்லிங், அதாவது மல்யுத்தப் போட்டியின் தொடக்கத்தில் வீரர்கள் நிற்கும் முறைப்படி அமன் ஷெராவத்தை ஒன்றரை மணி நேர அதே நிலையில் நிற்க வைத்தனர்.
தொடர்ந்து ஒரு மணிநேரம் வெந்நீர்க் குளியல், ஒரு மணிநேரம் ட்ரெட் மில்லில் ஓட்டப் பயிற்சி, பிறகு உலர் வெப்பத்தினால் ஆன அறை ஒன்றில் ஐந்தைந்து நிமிடங்களாக சானா குளியல் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து மசாஜ் செய்துகொண்டார். பிறகு பயிற்றுநர் ஒருவரின் உதவியுடன் மிதமான ஜாக்கிங் பயிற்சியை மேற்கொண்டார். இந்த பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடம் ஓட்டப்பயிற்சியையும் செய்தார். வெள்ளிக்கிழமை காலை 4:30 மணியளவில் அமன் ஷெராவத்தின் உடல் எடை 56.9 கிலோவாகக் குறைந்திருந்தது, அதாவது 57 கிலோவுக்கு 100 கிராம் எடை குறைவாகவே அவர் இருந்தார்.
இந்த பயிற்சி அமர்வுகளுக்கு இடையிடையே வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவை கலந்து அருந்தினார். அவ்வப்போது கொஞ்சம் காபியும் குடித்தார். இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு அமன் தூங்கவில்லை.
இதுதொடர்பாக அமன் ஷெராவத் கூறியதாவது;
“ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் குறிக்கோளுடன் பங்கேற்றேன். இந்த முறை சுற்று கடினமாக இருந்தது. எனினும் 2028 ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கம் வெல்வேன். அரையிறுதியில் தோற்றவுடன் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக இருந்தது. உடற்பயிற்சிக் கூடத்திலும் கடும் பயிற்சி செய்தேன். வெண்கலப் பதக்க ஆட்டத்துக்கு முன்பு தூங்கவே இல்லை” எனத் தெரிவித்தார்.