சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஜூன் 21) சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்றைய கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரம் ஆரம்பிக்கும் போதே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்னையை எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் சட்டசபையில் கூச்சல் குழுப்பம் உருவானது. சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு உறுப்பினர் அமைதி காக்க வலியுறுத்தினார். ஆனால் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்னை எழுப்பியதால் அமளியானது.