காயமடைந்த சிறுவனை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன்!
திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று சந்தித்தார்.
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. புஷ்பா 2 ரிலீஸுக்கு முன்தினம் இரவு, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.
அதனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயரிழந்தார். மேலும், அவருடைய 7 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீ தேஜ் செகந்திராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது புஷ்பா 2 படத் தயாரிப்பாளர் தில் ராஜுவும் உடன் வந்தார். பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.
இதையொட்டி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு புஷ்பா 2 படக் குழுவினர் ரூ.2 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.