பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
பராமரிப்பு பணி காரணமாக பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் சுற்றலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவில் உள்ளது பாலருவி நீர்வீழ்ச்சி. இந்த பாலருவி நீர்வீழ்ச்சிக்கு நாட்டின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சிக்கு கேரளா சுற்றுலா பயணிகளை விட, தமிழக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அடுத்த கட்டமாக தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள பாலருவி
நீர்வீழ்ச்சிக்கு செல்வர். அடர் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள இந்த பாலருவியானது முற்றிலும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆரியங்காவு பகுதியில் இருந்து பாலருவி நீர்வீழ்ச்சிக்கு வனத்துறை வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி காரணமாக பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டு இருந்தது. தற்போது சீசன் காலம் தொடங்கியுள்ள நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாலருவியானது இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.