“தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர், “தமிழ்நாட்டுக்கு ரயில்வே திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.6362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.33467 கோடி அளவிலான ரயில்வே திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் ‛அம்ரித்' திட்டத்தின் அதிநவீன வசதிகளுடன் நவீனமாக மாற்றப்படும்.
687 பாலங்கள், சுரங்க பாதைகள் கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. ரூ.879 கோடி மட்டுமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதிதாக ஒதுக்கப்பட்டது. தற்போது அது 7 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். குறிப்பாக ரயில்வே திட்டங்களுக்கான நிலங்களை கையகப்படுத்தி தருவதில் தாமதமாகி வருவதால் திட்டங்கள் மெதுவாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது. மாநில அரசு ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும். ரயில்வே பாதுகாப்பு அம்சத்துக்காக ரூ.1.09 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.