ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
தொடர்ந்து, இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இளைய தலைமுறையினரை வேளாண் தொழிலில் நாட்டம் கொள்ளச் செய்வதற்காக நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். வேளாண் பட்ஜெட்டில், சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறியதாவது:
- ஆதி திராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு
- பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம் உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளை தானியங்கி மையமாக்க ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கீடு
- வறண்ட நிலங்களில் தோட்டக்கலையை மேம்படுத்த ரூ.3.64 கோடி ஒதுக்கீடு
- பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
- சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி ஒதுக்கீடு