ஜம்மு காஷ்மீரில் மாறுகிறதா கூட்டணி? தேசிய மாநாடு கட்சி விளக்கம்!
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்காக இந்தியா கூட்டணியை தாண்டி வேறு எந்த கட்சியுடனும் மறைமுக பேச்சு நடத்தவில்லை என தேசிய மாநாடு கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரின் முன்னாள் மேயர் ஜுனைத் அசிம் மாட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் (X) - ல் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தேசிய மாநாடு கட்சி சார்பில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர் இது வதந்தியா? அல்லது உண்மையா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜுனைத் அசிம் மாட்டு, தான் கூறியபடி ஃபரூக் அப்துல்லா தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என அவர்கள் மறுக்கட்டும். அந்த சந்திப்பு குறித்த அனைத்து விவரங்களை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள ஃபரூக் அப்துல்லா, தோல்வியை உணர்ந்தவர்கள் இவ்வாறு ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா கூட்டணியை தாண்டி, எந்த கட்சியுடனும் தேசிய மாநாடு கட்சி பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், இந்த ஆதரமற்ற வதந்திகளை முற்றிலும் மறுப்பதாகவும் கூறியுள்ளார்.