எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
இதையும் படியுங்கள் : இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா? - உண்மை என்ன?
இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர். விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர்.
முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்த கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனையடுத்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.