"குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாகளுக்கு 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். அதேபோல், அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றதுக்கு 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பினார்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்டிருந்தது. அதன்படி, இந்த விவகாரம் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 29ம் தேதி நடைபெறும் என்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.