காஷ்மீரில் நாளை அனைத்து கட்சி கூட்டம் - பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க உமர் அப்துல்லா அழைப்பு!
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவ வீரர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ நேற்று(ஏப்ரல்.22) பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, கனத்த இதயத்துடன் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இந்த சம்பவம் நம் அனைவரையும் ஆழமாக உலுக்கியுள்ளது. இது ஒரு பகுதிக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ ஏற்பட்ட சோகம் மட்டுமல்ல, இது ஜம்மு & காஷ்மீரின் ஆன்மாவின் மீது ஏற்பட்ட காயம்.
இந்த துயர தருணத்தில், மக்களின் பிரதிநிதிகளாகவும், ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலர்களாகவும், நமது அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்து நமது பதிலில் ஒற்றுமையாக நிற்பது நமது கூட்டுக் கடமை என்று நான் நம்புகிறேன். எனவே, நிலைமையைப் பற்றி விவாதிக்கவும், இந்த பயங்கரவாதச் செயலுக்கு நமது கூட்டுக் கண்டனத்தைத் தெரிவிக்கவும், அமைதி, நீதி மற்றும் மீண்டு வருவதை உறுதி செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறேன்.
இந்தக் கூட்டம் நாளை (ஏப்ரல் 24) பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீநகரில் உள்ள SKICC-யில் நடைபெற உள்ளது. ஜம்மு & காஷ்மீர் மக்களின் வலிமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு பொதுவான குரலை நாம் உருவாக்கும் போது உங்களின் வருகையும் ஆலோசனையும் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். முதலமைச்சராக இல்லை, உங்கள் வேதனையையும் கவலையையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பராகவும், சக குடிமகனாகவும் இந்த அழைப்பை விடுக்கிறேன். இந்த வேதனையான நேரத்தில்மக்களின் சேவையில் நாம் ஒன்று சேருவோம்”
இவ்வாறு ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.