தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரியாக ஞானேஷ்குமார் சமீபத்தில் பதவியேற்றார். இதனையடுத்து ஞானேஷ்குமார் நாடு தழுவிய அளவில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளின் போது தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளிடம் தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து தேர்தல் விதிகளின் அடிப்படையில் அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று (மார்ச் 24) அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள கூட்டரங்கில் மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட மொத்தம் 12 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள், போலி வாக்காளர்கள், 18 வயது எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக கேள்வி எழுப்படும் என கூறப்படுகிறது.