" ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் " - ராம்நாத் கோவிந்த் கோரிக்கை
" ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் " என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த செப். 1 அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே இந்தக் குழுவில் இடம்பெறாதது குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து அதன் தலைவராக என்னை நியமித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக குழுவின் உறுப்பினர்களுடன் ஆலோசித்து மற்றும் மக்களின் கருத்துகளை கேட்டு அதற்கான நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம்.
தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு இதுகுறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளேன். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கட்டத்தில் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. நாட்டின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.