For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஜெகபர் அலி மரணத்திற்கு அனைத்து அதிகாரிகளும் பொறுப்பு” - #EPS கண்டனம்

ஜெகபர் அலி கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு என அதிமுக பொதுச்செயலாளர் கண்டம் தெரிவித்துள்ளார்.
10:54 AM Jan 20, 2025 IST | Web Editor
 ஜெகபர் அலி மரணத்திற்கு அனைத்து அதிகாரிகளும் பொறுப்பு”    eps கண்டனம்
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜெகபா் அலி (58). முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், கனிம வள கொள்ளை நடப்பதாக அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கனிமவள கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிலர் ஜெகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரை லாரி ஏற்று படுகொலை செய்துள்ளனர் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த அரசு. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.

ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement