மே 10-க்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் - மாலத்தீவு அதிபர் முய்ஸு!
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மே 10-ம் தேதிக்குள் வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவின் அதிபரை சந்தித்தார். பின்னர் நாடு திரும்பிய அதிபர், மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிபர் கேட்டுக் கொண்டார்.
கடந்தாண்டு நடந்த மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின் போதே முய்ஸு, இந்தியாவுடனான உறவுகளைக் குறைப்பேன் என்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார். அப்போதே அவர் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தையும் வெளியேற்றுவேன் என்பதை முன்வைத்து இந்தியா அவுட் என் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தார். தொடர்ந்து அதிபராகத் தேர்வான பிறகு அவர் கடந்த நவ. மாதம் இந்தியா தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அதிபர் முகமது மூயிஸ், வெளிநாட்டு ராணுவ இருப்பு தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் நாட்டின் இறையாண்மை சார்ந்த விவகாரங்களில் சமரசம் செய்யும்படியான எவ்வித ஒப்பந்தங்களுக்கும் அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.
முதல்கட்டமாக மார்ச் 10-ம் தேதிக்குள் ஒரு விமான தளத்திலும், மே 10-ம் தேதிக்குள் மீதமுள்ள 2 விமான தளங்களிலும் பணிபுரிகின்ற இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறுவார்கள் என தெரிவித்தார்.
மாலத்தீவில் சுமார் 80 இந்திய ராணுவ வீரர்கள் மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து வரும் மாலத்தீவு அதிபருக்கு எதிராக உள்நாட்டில் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.