அகில இந்திய ஹாக்கி போட்டி - போபால் , புவனேஸ்வர் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி!
13வது அகில இந்திய ஹாக்கி போட்டியின் இறுதி சுற்றில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி
ஹாக்கி மைதானத்தில், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை சார்பில் அகில இந்திய
ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் தலைசிறந்த 16 ஹாக்கி அணிகள் கலந்து கொண்டன. இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.
லீக் போட்டி முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில்
நேற்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இதில் 4:2 என்ற கோல் கணக்கில் போபால்,
நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி
பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு கனரா பேங்க் அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதின.
போட்டியை தொடங்கிய இரு அணி வீரர்களும் சம பலத்தில் மோதினர். போட்டி முடிவில் 2 -
2 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு
அதில், 2 - 1என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றிப் பெற்று
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று இரவு நடைபெறும் இறுதி போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன.