For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகை கௌதமி புகாரில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

02:48 PM Dec 27, 2023 IST | Web Editor
நடிகை கௌதமி புகாரில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
Advertisement

நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பனிடம் விசாரிக்க போலீசாருக்கு 3 நாட்கள் அவகாசம் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Advertisement

நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கடந்த மாதம் அளித்தார். அதில் அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து உள்ளனர். எனவே தனது அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் நடிகை கௌதமி தெரிவித்தார். குறிப்பாக தனது மகள் 4 வயதாக இருக்கும் போது கடந்த 2004-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் தான் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சொத்துக்களை விற்க முடிவு செய்ததாக தெரிவித்திருந்தார்.

எனவே, அழகப்பன் தனக்கு சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உதவியாக இருந்ததாகவும், தனது தாய் வசுந்தரா தேவி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 46 ஏக்கர் சொத்துக்களை தான் 17 வயதில் இருந்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து வாங்கியதாக குறிப்பிட்ட நடிகை கௌதமி, தனது உடல்நிலை காரணமாகவும் மகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் பல்வேறு வேலைகளை செய்ய முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சொத்துக்கள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அழகப்பனை பவர் ஏஜென்டாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொண்டு அழகப்பன் தன்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாடகமாடி சொத்துக்களின் பவர் ஏஜெண்டாக மாறியதோடு மட்டுமல்லாது அது தொடர்பான நடவடிக்கைக்காக பல்வேறு வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனை பயன்படுத்திக் கொண்டு அழகப்பன் மற்றும் அவரது மனைவி, குடும்பத்தினர் மோசடி செய்து தனது சொத்துக்களை அபகரித்துள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார். குறிப்பாக நான்கு விதமான மோசடிகள் மூலமாகவும் தனது வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே போல ரூ.4 கோடி பணத்தை வேறு வகையில் மற்றொரு சொத்துக்கள் வாங்குவதாக கூறிக் கொண்டு அழகப்பன் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் மாற்றி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் கோட்டையூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 29 சென்ட் நிலத்தை விற்பனை செய்து நீலாங்கரையில் 6.62 கிரவுண்ட் இடத்தை வாங்கியதாகவும் அந்த சொத்தையும் மோசடி செய்து அபகரித்ததாகவும் தன்னிடம் கேட்காமலேயே அந்த இடத்தில் மின்சார இணைப்பு மற்றும் கட்டிட அனுமதி வாங்கி இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தை கட்டியதும் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

தனது சொத்து ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்த சொத்துக்களை மீட்க முயற்சித்தாகவும் ஆனால் அரசியல் பலம் மற்றும் அதிகார பலம் காவல்துறை அதிகாரிகள் வைத்து மிரட்டி சொத்துக்களை மீட்க முடியாதபடி செய்துள்ளதாகவும் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

சொத்துக்களை மீட்க முயற்சியில் ஈடுபட்ட தன்னை மட்டுமல்லாது தன் மகளுக்கும் தனக்கு உதவி செய்யும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் கொடுப்பதாக குற்றம் சாட்டி புகாரில் தெரிவித்தார். தன்னிடம் மோசடி செய்து அபகரித்த சொத்துக்களை மீட்டுத் தருமாறும் கொலை மிரட்டல் விடுக்கும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடிகை கௌதமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, காரைக்குடி கோட்டையூர் அழகப்பன் வீட்டில் சென்னை போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு சென்னை கொண்டு செல்லப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். அதே நேரம்  நடிகை கௌதமிக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த அழகப்பன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மோசடிக்கு உடந்தையாக உள்ளவர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அதேநேரம், அழகப்பன் மகன் சிவா லண்டனில் வசித்து வருவதாக கூறப்பட்டது. இதனால் அவர் லண்டனுக்கு தப்பி செல்லலாம் என்று சந்தேகித்தனர். இதையடுத்து அழகப்பன் மற்றும் அவருடைய மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேரை கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  

இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பனிடம் விசாரிக்க 3 நாட்கள் போலீஸ் காவல் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலில் எடுத்த பின் இந்த வழக்கில் பின்புலத்தில் யாராவது உள்ளார்களா என்பது தொடர்பாக அழகப்பனிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement