ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா? - அகிலேஷ் யாதவுக்கு பாஜக கண்டனம்!
பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
"2014-ல் ஆட்சிக்கு வந்தவர்கள் 2024-ல் வெளியேறுவார்கள். ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டுகள் நீடித்தது. அதுபோல் இவரும் 10 ஆண்டுகால ஆட்சியுடன் வெளியேற இருக்கிறார்” என மறைமுகமாக பிரதமர் மோடியை தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவின் மூத்த தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
“பிரதமர் மோடி இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேசஅளவிலும் புகழ்பெற்ற தலைவர் என்பதை அகிலேஷ் யாதவ் மனதில் கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பாஜக தொடர்ந்த வெற்றிகளைக் குவித்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும். சமாஜ்வாதி கட்சியின் குண்டர்கள் கும்பலுக்கு மீண்டும் தோல்வி கிடைக்கும். பிரதமர் மோடியை அவமதிப்பவர்களை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என குறிப்பிட்டுள்ளார்.