காற்றின் தரக்குறியீடு 406 | மீண்டும் மோசமைடைந்த டெல்லி சுற்றுசூழல்!
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 406 என்ற புள்ளியில் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தலைநகர் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏராளமானோர் பட்டாசு வெடித்தனர். தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை, பல பகுதிகளில் காலை முதலே பட்டாசு வெடித்தது, மாலை நெருங்க நெருங்க பெரிய அளவில் பட்டாசு வெடித்தனர். 90 டெசிபல் ஒலி வரம்பை தாண்டிய பட்டாசுகளின் சத்தம் என்சிஆர் பகுதியில் தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி வரை வெடிக்கப்பட்டது.
இதன் காரணமாக, மாசுவும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, நேற்று காலை (நவம்பர் 13) டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 296 ஆக இருந்தது, இது இயல்பை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
அண்மையில் மழை காரணமாக காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால், பொதுமக்கள் மூச்சுத்திணறல், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே டெல்லியில் சுற்றுசூழல் மாசுபாடு மோசமான நிலையில் நீடித்து வரும் நிலையில், காற்றின் தரக்குறியீடு 406 என்ற புள்ளியில் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி வாழ் மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.