டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்றின் தரம்!
டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் மருத்துவமனைகளில் சுவாசகோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு 356 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கிறது.
மேலும், டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரண்மாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.
டெல்லியில் உள்ள பவானா, முண்ட்கா, வஜிர்பூர் மற்றும் துவாரகா ஆகிய நான்கு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் கடுமையான பிரிவில் பாதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று தரக் குறியீட்டில் 0 முதல் 50 வரை இருந்தால் காற்று தரத்துடன் உள்ளது என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருக்கும்.
இதே போல், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம் என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் மற்றும் 401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.