ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் ரத்து - மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி!
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து டாடா நிறுவனம், பணி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை வெளியிட்டு உள்ளதாகவும், இதற்கு விமானிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு என 86 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மொத்தம் 183 பயணிகளுடன் மதுரையில் இருந்து புறப்பட
வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள்
பெரும் அவதிக்குள்ளாகினர். விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஊழியர்கள் பயணிகளிடம் எதுவும் தெரிவிக்காததால் பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களிடம் மூன்று மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து வந்த 83 பயணிகளும் திருப்பி அனுப்பப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.