For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

05:24 PM May 01, 2024 IST | Web Editor
கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து, வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

“கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுகளின் அளவு குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கு காப்புரிமை பெற்று இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்து வெளியிட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் அரிதாக ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. கொரோனா பரவல் காலக்கட்டத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி நாடு முழுவதும் 170 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் கொரோனா பரவலுக்கு பின்னர் நாட்டில் அதிகளவில் இளம் சமுதாயத்தினரிடையே மாரடைப்பு மற்றும் அசாதாரண மரணங்கள் நிகழ்வது அதிகரித்துள்ளன.

இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்திய குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, இந்த பிரச்னையை மத்திய அரசு முன்னுரிமையில் கவனிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவலின் போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்க உத்தரவிடக் கோரியும் மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags :
Advertisement