Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | “அதிமுக புறக்கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்!

03:23 PM Jan 12, 2025 IST | Web Editor
Advertisement

“பொறுப்புள்ள எதிர்க்கட்சி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது;

“விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிதம்பரம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். விசிகவிற்கு இந்த வெற்றிக் கிடைக்க உற்ற துணையாக இருந்த திமுக மற்றும் அதன் தலைமையிலான தோழமைக் கட்சிகளுக்கு இந்நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களை ஆதரியுங்கள், வாய்ப்பளியுங்கள் என மக்களிடம் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தோம். விசிக சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்பதை மனப்பூர்வமாக ஏற்று கொண்டிருக்கிறார்கள். இந்த அங்கீகாரத்தில் பெருமைப்படுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம். முதலமைச்சரை விசிக சார்பில் நேரில் சந்தித்து திமுக ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றியை பகிர்ந்துள்ளோம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றிக்கு விசிக உறுதுணையாக இருந்து பணியாற்றுவோம் என பகிர்ந்து கொண்டோம். யுஜிசி வரையறுத்துள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. மேலும் உயர்கல்வியில் பல்கலை துணை வேந்தர்களை மட்டுமின்றி, பேராசிரியர்கள் பொறுப்புகளையும் நியமனம் செய்கிற முழுமையான அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்ளும்.

இதன் விளைவு மக்களுக்கான அதிகாரத்தை பறித்துக் கொள்கிற நிலை உள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. ஆகவே இதனை எதிர்த்து இந்திய அளவில் இந்தியா கூட்டணி எதிர்வினை ஆற்ற வேண்டும். அதற்கான முன் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். இந்த சந்திப்பு மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாடு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கான பலவீனத்தை வெளிப்படுத்துவதாகத் தான் கருதுகிறோம். வெற்றியோ, தோல்வியோ அதை எதிர்கொள்வதுதான் அதிமுகவுக்கு உள்ள சிறப்பு. ஆனால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்தார்கள். இப்போது ஈரோடு கிழக்கு தேர்தலையும் புறக்கணித்திருக்கிறார்கள்.

இது மறைமுகமாக பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பதாக அமையும். அதிமுகவை பின்னுக்கு தள்ளி நாங்களே இரண்டாவது பெரிய கட்சி என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக முன்னெடுக்கும். பாஜகவோ, பாஜக ஆதரவுடன் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்களுக்கோதான் அதிமுகவின் நிலைப்பாடு சாதகமாக அமையும். அது எந்த வகையிலும் அதிமுகவிற்கு பலன் தராது. அதிமுக மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பு கடுமையாக பாதிக்கப்படும். இதை அவர்கள் ஏன் எடுத்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அதிமுகவின் சரிவுக்கான புள்ளியாக அமையும்.

எஸ்சி/எஸ்டி பிரிவில் கிரிமிலேயர் பிரிவை கொண்டு வருவதை கடுமையாக
எதிர்க்கிறோம். ஓபிசிக்கே கிரிமிலேயர் கூடாது என்பது தான் எங்களுடைய
நிலைப்பாடு. தமிழ்நாடு அரசு கிரிமிலேயரை ஒருபோதும் ஏற்காது, அதற்கு ஆதரவு
தெரிவிக்காது என நம்புகிறோம்.

சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது தான் நல்லது. ஒருவருக்கொருவர் தொகுதிகளையும் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் தான் சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு ஏதுவாக அமையும். இது போன்ற குழப்பங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் அதனை சுய விமர்சனம் செய்து, அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

காங்கிரஸ் தரப்பில் இருந்தாலும், பிற கட்சிகள் தரப்பில் இருந்தாலும் அதை
பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்ற அச்சம் இருக்கிறது. எனவே டெல்லி
சட்டமன்ற பொது தேர்தலாக இருந்தாலும், அல்லது எதிர்வருகிற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் இந்தியா கூட்டணி நாட்டின் நலன் கருதி ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் வேண்டுகோள்.

மதுரை அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்தை தடுப்பதற்கு தனி சட்டம் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

Tags :
ADMKby electionErode East ConstituencythirumavalavanVCK
Advertisement
Next Article