"2026ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்" - #CVShanmugam MP பேட்டி!
2026ம் ஆண்டு அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக -வை தொடங்கினார். அதிமுக தொடங்கப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அக்கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று அதிமுக -வின் 53-வது ஆண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிலையில், அதிமுகவின் 53 வது தொடக்க ஆண்டினை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுக்கு வேஷ்டி, சேலை, சட்டை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"அதிமுக சீறும் சிறப்புமாக உள்ளதால் 2026ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது பிரதமரை பார்த்து கும்மிடு போட்டாரோ அன்றையிலிருந்து தமிழ்நாடு ஆளுநர் அரசை வானளவு உயர்த்தி பேசி கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.