Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
12:57 PM Feb 12, 2025 IST | Web Editor
Advertisement

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து பிப். 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "

Advertisement

தமிழ் நாட்டில் திமுக அரசு பதவியேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.

அந்த வகையில், திமுக ஆட்சியில், பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக, எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளில் ஒருசிலவற்றை மக்களுக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி. 'யார் அந்த சார்?' கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு!

வேலூரில், இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, ஆறு பேர் கொண்ட காமுக கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்! தூத்துக்குடியில் 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் தொல்லை. சென்னையில் சிறுமிக்கு கிக்பாக்சிங் பயிற்சியாளரால் பாலியல் சீண்டல். திருப்பூரில் 17 மாணவிகளுக்கு, விடுதி வார்டனால் பாலியல் தொல்லை.
திருவள்ளூரில் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியரால் பாலியல் தொல்லை.

சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி, 10-க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமை. சென்னையில் ஓட்டுநர் பயிற்சிக்கு வந்த கல்லூரி மாணவிக்கு, பயிற்சியாளரால் பாலியல் தொல்லை. தஞ்சாவூரில் இளம் பெண்ணுக்கு கல்லூரி ஆசிரியரால் பாலியல் தொல்லை. தருமபுரியில் 3 சிறுமிகளுக்கு ஓட்டுநரால் பாலியல் தொல்லை. கும்பகோணத்தில் கல்லூரி மாணவிக்கு அரபி வகுப்பு ஆசிரியரால் மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு. திருவண்ணாமலையில், 10-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் சீண்டல். சென்னை, IIT-யில் Ph. D., மாணவியிடம் பேக்கரி ஊழியர் பாலியல் சீண்டல். திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பாலியல் தொல்லை.

கன்னியாகுமரியில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு போதை ஆசாமியால் பாலியல் தொந்தரவு. சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை. ஓசூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல். விழுப்புரத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை. சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 18 வயது இளம் பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்.

திருச்சி, மணப்பாறையில் 2 மாணவிகளுக்கு, தாளாளரின் கணவர் உள்ளிட்ட 5 பேர் பாலியல் சீண்டல். கோவையில் 14 வயது பள்ளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை. விழுப்புரத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியரால் பாலியல் தொல்லை. திருப்பூரில் மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் சீண்டல். புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் தொல்லை.

திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை, அனைத்து இடங்களிலும் மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர். இந்த அவல நிலைக்குக் காரணமான திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில், 18.2.2025 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையிலும்; கழக மாணவர் அணிச் செயலாளர் சிங்கை G. ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும். திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணி மாநில துணை நிர்வாகிகளும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மாணவர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும், மாணவர் அணியினரும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
againstAIADMKAnnouncementChennaiDMKedappadi palaniswamiProtestSexual assaultstudentvalluvarkottam
Advertisement
Next Article