புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்!
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் புதுச்சேரி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருவதால் இந்த ரெஸ்டோ பார்கள் அரசு அனுமதித்த நேரமான இரவு 12 மணியை தாண்டியும் அதிகாலை வரை இயங்குவதால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்ற குற்றசாட்டு உள்ளது. குறிப்பாக
கடந்த வாரம் ரெஸ்டோ பாரில் நடத்த தகராறில் புதுச்சேரியிக்கு சுற்றுலா வந்த
தமிழக வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசின் நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமைத்தை கலால் துறையினர் தற்காலிகமாக ரத்து செய்தனர்.
இந்நிலையில் ரெஸ்டோ பார்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் அனைத்து ரெஸ்டோ பார்களின் உரிமத்தை ரத்து செய்து அதனை மூட வலியுறுத்தி புதுச்சேரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று புதுச்சேரி அரசை கண்டித்தும், ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அதிமுகவினருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பாதுகாப்புக்காக போடப்பட்ட பேரிகார்டுகளை அதிமுகவினர் தள்ளியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.