தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களின் முன்பு வரும் திங்கட்கிழமை (மார்.4) கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியாகி அந்தக் குடும்பங்கள் நடுத் தெருவிலே நிற்கின்ற நிலை உருவாகி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், தற்போது வெளியாகி இருக்கின்ற செய்தி, தமிழ் நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா முழுவதும், தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஆளும் திமுக கட்சியை ஓர் அச்சத்தோடு பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை, அந்த நாடுகளுடைய காவல் துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்த பிறகு, Narcotics Control Bureau என்று சொல்லப்படுகின்ற NCB அமைப்பும், இந்த போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்தபோது தான், உண்மையிலேயே தமிழ்நாடு மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.