அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!
அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுக சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னென்ன தொகுதிகள் என்பது அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும். அதிமுக கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும். தேர்தலுக்கும் இன்னும் நாட்கள் உள்ளது. விரைவில் எந்த தொகுதி என்பதனை பேசி முடிவு எடுப்போம்” என தெரிவித்தார்.