அதிமுகவினர் அனுமதி பெறாமல் கட் அவுட்டுகள் வைத்துள்ளனர் - அமைச்சர் ரகுபதி பேட்டி!
தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் மற்றும் கட் அவுட்டுகள் வைப்பது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியிருப்பதாவது, "கட் அவுட்டுகள் வைக்கக் கூடாது என்பது உயர் நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு. தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகையின்போது, நாங்கள் கொடிகளை மட்டுமே கட்டுவோம். கட் அவுட்டுகள் வைக்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது. கட் அவுட்டுகள் வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கட்சியின் கடுமையான உத்தரவு.
மேலும், நாங்கள் கட் அவுட்டுகள் வைப்பதில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், பொதுமக்கள் இடையூறின்றி பார்க்கும் வகையில், ஒன்று அல்லது இரண்டு பதாகைகள் மட்டுமே வைக்கும் பழக்கம் திமுகவிடம் உள்ளது. இது திமுகவின் கட்டளை மற்றும் உத்தரவு," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கட் அவுட்டுகள் வைப்பதால் ஏற்படும் ஆபத்துகளையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். "கட் அவுட்டுகள் வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. சாலையில் செல்லும் போது பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டு விடக்கூடாது. கட் அவுட்டுகள் ஒழுங்காக கட்டப்படாமல், மக்களின் தலையில் விழுந்து அடிபட்டு விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது," என்றார்.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுகவினர் அனுமதி பெறாமல் கட் அவுட்டுகள் வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். அவற்றை அகற்றச் சென்றால், அரசியல் உள்நோக்கம் என்று கூறுவார்கள். ஆனால், நாங்கள் சட்டத்தின்படியும், மக்கள் நலன் கருதியும் செயல்படுகிறோம், என்றும் அவர் தெரிவித்தார்.