“அதிமுக ஒன்றிணையாமல் 2026ல் ஜெயிக்க முடியாது” - பெங்களூரு புகழேந்தி!
சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சொல்லாதீர்கள்; நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ அவர்தான் பொதுச்செயலாளர் என்று சொல்லவில்லை. அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசிய பின்னரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்புவது நியாயமில்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லட்டும். பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என ஒரு தரப்பும், வேண்டாம் என்று ஒரு தரப்பும் உள்ளதால் அதிமுகவிற்குள்ளேயே இருதரப்பினரிடையே சிக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி; ஆகையால்தான் கூட்டணி குறித்து பேச 6 மாதம் நேரம் கேட்டுள்ளார்.
அதிமுகவை ஒழிக்கும் வரை எடப்பாடி பழனிசாமி தூங்கமாட்டார். அதிமுக ஒன்றிணையாமல் 2026ல் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி யாரைத்தான் முதுகில் குத்தவில்லை. 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இரட்டை இலையை வாங்க முடியாது. கொடநாடு வழக்கு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று முதல்வர் சொல்ல வேண்டும்; எடப்பாடி பழனிசாமியை விரைந்து விசாரிக்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மாநில அரசுகளுடன் அண்டர் டீலிங் ( under dealing) வைத்துள்ளார்” என தெரிவித்தார்.