AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: விளக்கமளிக்கும் பில்கேட்ஸ்!
AI தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது என தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரும், தொழிலதிபருமான பில்கேட்ஸ், “ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அச்சம் வருகிறது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது.
1900ம் ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்த நிலையில், அவற்றை தாண்டி பல புதிய வேலைகளை உருவாக்கி உள்ளோம். அதுபோல ஏஐ தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். மக்களின் வாழ்க்கையை இது எளிதாக்குவதோடு வேகமாகவும் செய்ய முடியும்.
அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும். மேலும் இதை பயன்படுத்துவது மிகவும் எளிது. இதற்கான தனியாக ஒரு கருவிகள் தேவையில்லை. ஏற்கெனவே நாம் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை வைத்தே இந்த AI தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.