தமிழில் ஏஐ தொழில்நுட்பம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!
தமிழில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) உருவாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு அது பெரிதளவில் உதவியாக இருக்கும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (ஐடிஎன்டி) முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தியாகராஜன் தெரிவித்ததாவது..
செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பொருத்தவரை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கேற்ப அதன் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழ் மொழியில், 'ஏஐ' உருவாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு அது, பெரிதளவில் உதவியாக இருக்கும். அதேசமயம், தமிழ்நாட்டில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், அதை உருவாக்க சுமார் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு தேவை. இதுபோன்ற பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டும்தான் வெறும் 100 சதுர அடியில் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இருப்பினும் கர்நாடகம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது ஐடி துறையில் தமிழ்நாடு பின்தங்கி தான் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஐடி துறைக்கு மட்டும் சுமார் ரூ. 700 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளை மேம்படுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், ஐடி துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க முடியவில்லை. இருப்பினும், ஐடி துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.
இந்நிகழ்வில், தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே.ஜெயரஞ்சன், ஐடிஎன்டி மையத்தின் தலைமை செயலர் அலுவலர் வனிதா வேணுகோபால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய தலைவர் கிஷோர் ஜெயராமன், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.