#India - #China இடையே உடன்பாடு | கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து!
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே எழுந்த கடுமையான மோதலுக்கு பின்பு உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் நடக்கும் 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு முன்பாக எல்லைக் கட்டுப்பட்டு கோடு அருகே ரோந்து குறித்த இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "இந்தியா - சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டின் பிரதிநிதிகளும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். அதன் விளைவாக இந்தியா - சீனா இடையே இருக்கும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ரோந்து செல்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது இந்தப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு எழுந்த இறுதி தீர்வுக்கு இட்டுச் செல்வதாக அமைந்துள்ளது.தற்போதைய ஒப்பந்தம், டெஸ்பாங்க் மற்றும் டெம்சோக் ஆகிய இடங்களில் ரோந்து செல்வது தொடர்பானது என்பதாக தெரிகிறது" என்று தெரிவித்தார்.