"அக்னிவீர் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை?
அக்னிவீர் திட்டம் குறித்து பாஜக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) எண்ணப்பட்டன. இத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் கேசி தியாகி கூறுகையில், "அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதற்கு நல்ல வரவேற்பு இல்லை. மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். தேர்தல்களிலும் அதன் தாக்கத்தை நாங்கள் கண்டோம். எனவே இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அக்னிவீர் திட்டத்தால் ஒரு பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் இதில் இருக்கும் பல குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அந்த குறைகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அவற்றை நீக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பொது சிவில் சட்டம் குறித்து ஏற்கனவே நிதிஷ்குமார் சட்ட கமிஷன் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு நாங்கள் எதிராக இல்லை. ஆனால், அனைத்து தரப்பு உடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.