“தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” - அமைச்சர் உதயநிதி வாக்குறுதி!
மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :
“திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மாமாவுக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளேன். உதயசூரியன் சின்னத்தில் நாம் போடும் ஓட்டு, பிரதமர் மோடியின் தலையில் நாம் குடுக்கும் கொட்டு. குறைந்தது 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு மாமாவை ஜெயிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், நான் மாதம் 2 முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வருகை தந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுவேன்.
கொரோனா காலத்தில் விளக்கு போடுங்கள், தட்டு வச்சு சத்தம் போடுங்கள் என்று சொன்னவர் பிரதமர் மோடி. ஊசி போட்டால் தான் கொரோனா ஒழியும் என கிட் மாட்டிக் கொண்டு ஆய்வு செய்தவர் இந்தியாவிலே ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால், தினமும் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். குழந்தைகளை அவர்களது பெற்றோர் தைரியமாக பள்ளிக்கு அனுப்புகின்றனர். இந்த திட்டத்தை தெலங்கான உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இதுதான் திராவிட மாடல் அரசு. 1 கோடியே 18 லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு விண்ணப்பித்த 1 கோடி 60 லட்சம் பேருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் பாஜகவால் 1 சீட்டு கூட பெற முடியாது. ஏற்கனவே ‘GO BACK MODI’ என்றோம். இந்தமுறை ‘GET OUT MODI’ என்று சொல்ல வேண்டும். வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி கேட்டோம். இதுவரை வழங்கவில்லை. மரியாதையாகத்தான் கேட்டேன். இதுவரை வழங்கவில்லை”
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.