விவாகரத்துக்கு பிறகு "டைவர்ஸ்" என்ற பெயரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்திய #Dubaiprincess!
துபாய் இளவரசி மஹ்ரா எம்1 என்ற தனது பிராண்டின் கீழ் "டைவர்ஸ்" என்ற புதிய வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்த உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துமின் மகள் இளவரசி ஷைக்கா மஹ்ரா (30). பிரிட்டனில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கைக்குழந்தையும் உள்ளது.
சமீபத்தில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்தார். அந்த பதிவில், 'அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்தாற்போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே 4 மாதங்களில் அவர் தனது பர்பியூம் நிறுவனத்தில் புதிய வாசனைத் திரவியம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். தனது நிறுவனத்தின் இந்த புதிய வாசனைத் திரவியத்திற்கு அவர் வைத்த பெயர் என்ன தெரியுமா "டைவர்ஸ்." துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம்மஹ்ரா எம் 1 என்ற பர்பியூம் பிரண்டை நடத்தி வரும் நிலையில், புதிய வாசனைத் திரவியத்திற்கான அறிவிப்பை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.
இதற்கான டீசர் இன்ஸ்டாகிராமில் வெளியான உடனேயே அது டிரெண்டானது. அதில் உடைந்த கண்ணாடி, கருமையான இதழ்கள் மற்றும் கருப்பு சிறுத்தை போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த பெயர் தான் சமூகவலைதளத்தில் சுவாரஸ்யமான விவாதத்தை கிளப்பி உள்ளது.