"திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது"- சிபிஐஎம் பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத்
திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே தொகுதி பங்கீடு குறித்து தெரிவிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
இந்த நிலையில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (பிப்.25) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"திமுக உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது. இரு தரப்பும் மனம் திறந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுக-வுடன் எந்தவிதமான நெருடலும் இல்லை. 3-ம் கட்ட பேச்சுவார்த்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து தெரிவிக்கப்படும்." இவ்வாறு சம்பத் தெரிவித்துள்ளார்.