'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கலக்கியது.
இந்த நிலையில் தனது துணை இயக்குனரின் புத்தக வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”சார்பட்டா பரம்பரை 2 படத்தின் இறுதி காட்சியை எழுதி முடித்து விட்டேன். ஒரு படத்தின் கதையை எழுதி முடிப்பது போல் சந்தோசம் வேறு எதுவும் இல்லை. மேலும் சார்பட்டா பரம்பரை 2 படத்திற்காக மீண்டும் நடிகர் ஆர்யா தனது உடலை தயார்படுத்தி கொண்டு வருகிறார்" என்றார்.
இப்படத்தின் முதல் பாகம் ஓடிடியில் வெளியான நிலையில் இரண்டாம் பாகமானது திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான படபிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து அவர் அறிவிக்கவில்லை.