முத்தமிழ்ச்செல்வியின் அடுத்த டார்கெட் அக்கோன்காகுவா மலை...!
நான்காவது மலை ஏறி சாதனை படைக்கச் செல்லும் முத்தமிழ்ச்செல்வியை குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன்-மூர்த்தியம்மாளின் மகள் முத்தமிழ்செல்வி(33). கடலூரில் படித்து முடித்து, திருமணமாகி தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். மொழிபெயர்ப்பாளராகவும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகளிர் தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியிலிருந்து கண்களை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு 58 விநாடிகளில் கீழே இறங்கி தனது முதல் சாதனையை பதிவு செய்தார்.கடந்த மே மாதம் எவரெஸ்ட் பயணத்தை தொடங்கினார். அதையும் வெற்றிகரமாக முடித்து, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றார். ஏழு கண்டங்களில் உள்ள உயரமான மலைச் சிகரங்களை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று ஏற்கனவே அவர் கூறியிருந்த நிலையில், ஆசிய கண்டத்தில் உள்ள சிகரமான எவரஸ்டை தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தின் உயர்ந்த சிகரமான 18,510 அடி உயரம் கொண்ட எல்பிரஸ் மலை மீதும் ஏறி சாதனை படைத்தார்.இதனையடுத்து, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்தார். தற்போது தென் அமெரிக்காவின், அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா சிகரத்தில் ஏறி சாதனை படைக்க உள்ளார். இதற்காக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் முத்தமிழ்ச்செல்வியை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தென் அமெரிக்காவின் மிக உயரமான சிகரமான அக்கோன்காகுவா மலையில் ஏற உள்ளேன். உலகின் மிகப்பெரிய மலைகளில் இது நான் ஏறும் நான்காவது மலையாகும். இந்த மலை 6,962 மீட்டர் உயரம் கொண்டது. இந்த மலையில் ஏறும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமை கொள்கிறேன். இதற்கு உதவி செய்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன்” எனக் கூறினார்.