போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் - நெதன்யாகு!
போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இஸ்ரேலிடம் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த அக். 7-ம் தேதி தொடங்கிய போர் இன்று 32வது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில், ஹமாஸ் உடனான போருக்குப் பிறகு காஸாவில் ஒட்டுமொத்த பாதுகாப்பு பொறுப்பு இஸ்ரேலிடம் இருக்கும், இது காலவரையற்றதாக இருக்கும் என்று கூறினார். மேலும், பிணைக் கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறிய அவர், குறுகிய கால இடைவெளியில் போர் நிறுத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் பேசியதன் அடிப்படையில், சுமார் 23 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வசிக்கும் காஸா பகுதியை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இஸ்ரேல் விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, போர் நிறுத்தம் தொடர்பாக நேற்று இஸ்ரேல் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போரில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் உயிரிழப்பு 10,000-யைக் கடந்துள்ளது. இதில் 4,100 பேர் குழந்தைகள், 2,640 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தரப்பில் 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.