3 மாதங்களுக்குள் 3 என்கவுன்ட்டர்கள்! | அதிரடி காட்டும் சென்னை #PoliceCommissioner அருண்!
பெருநகர சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு, திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜியை தொடர்ந்து சீசிங் ராஜா என்ற ரவுடியும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சென்னை கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய கமிஷனர் ஆக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் சென்னை கமிஷனர் ஆக பொறுப்பேற்ற நிலையில் இதுவரை 3 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
திருவேங்கடம்:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தவர் திருவேங்கடம். ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கான ரூட் மேப்பை கூலிப்படையினருக்கு கொடுத்தது திருவேங்கடம் என்கின்றனர் போலீஸார். ஆம்ஸ்ட்ராங்கை இரண்டாவதாக வெட்டியதும் இவர் தான் என்கிறது போலீஸ் தரப்பு. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த சரியாக 10வது நாளில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் புழல் பகுதிக்கு அவரை காவல்துறை அழைத்துச் சென்றது.
அப்போது ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் காவல் வாகனத்தை நிறுத்தியதாகவும், அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓட, அதில் எழுந்த மோதலில் அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த பரபரப்பு உச்சத்தில் இருந்தபோது, அருண் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் என்கவுன்ட்டர் இது.
காக்கா தோப்பு பாலாஜி:
பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி கடந்த 18-ம் தேதியன்று வியாசர்பாடி பகுதியில் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். சென்னை பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் என மொத்தம் 59 வழக்குகள் உள்ளன. போலீசார் நெருக்கடி காரணமாக ஆந்திர எல்லையோர பகுதிகளில் பதுங்கி இருந்து தனது ரவுடியிசத்தை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப் 18 அன்று அதிகாலை நேரத்தில் கொடுங்கையூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது காக்கா தோப்பு பாலாஜியின் கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று மடக்கிய போது வியாசர்பாடியில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது. பள்ளி காலத்தில் இருந்தே காக்கா தோப்பு பாலாஜி ரவுடி ஆவதையே கனவாக கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
சிசீங் ராஜா :
இப்படிப்பட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சிசீங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். நேற்றுதான் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். சென்னை அழைத்து வந்த போது நீலாங்கரை அருகே தப்பி செல்ல முயன்றதால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். போலீசார் இவரை பல வாரங்களாக தேடி வந்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இதன் மூலம் 2-வது குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.