வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் முடிவு! 14 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!
மும்பை பங்குச் சந்தையானது இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் உயர்வுடன் துவங்கி முடிவில் 76,456.59 புள்ளிகள் என்ற நிலையில் நிலைபெற்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் குறைந்து 76,456.59 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5.65 புள்ளிகள் அதிகரித்து 23,264.85 புள்ளிகளாக முடிந்தது. இன்றைய வணிகத்தில் நிலையற்ற போக்குகளை எதிர்கொண்டது பங்குச் சந்தைகள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய புளூசிப் நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவைக் கண்டன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை சரிவைச் சந்தித்தன.
அதே வேளையில் லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்தும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் குறைந்தும் வர்த்தகமானது. உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.23 சதவிகிதம் குறைந்து 81.44 அமெரிக்க டாலராக உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.2,572.38 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.