20 நாட்களுக்கு பிறகு செந்தூர் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்!
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்வே பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதையடுத்து, 20 நாட்களுக்கு பிறகு இன்று இரவு செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ரயில் நிலையம் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கின. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே உள்ள தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை முற்றிலுமாக சேதமடைந்து இருந்தது. அதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனிடையே தாதன்குளம் ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 20 நாட்களுக்கு பிறகு இன்று (ஜன.6) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.இந்நிலையில், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து, இன்று தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் பென்னி ஆய்வு செய்தார். பின்னர் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று இரவு முதல் வழக்கம் போல செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செந்தூர் விரைவு ரயில் மாலை 5 மணிக்கு திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வழக்கம் போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 20 நாட்களுக்கு பிறகு இன்று இரவு 8:20 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து செந்தூர் விரைவு ரயில் புறப்பட்டு திருநெல்வேலி வழியாக வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் திருச்செந்தூர் திருநெல்வேலி வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில் விரைவு ரயில் வழக்கம் போல இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.