12 மணிக்கு மேல் பேருந்துகள் பாதியில் நிறுத்தப்படும் - திருச்செந்தூரில் பயணிகளிடம் ஓட்டுநர்கள் கறார்!
இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், திருச்செந்தூரில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தொழிலாளர்களுடனான அரசின் அடுத்தடுத்த நடைபெற்ற மூன்றுகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதை எதிர்கொள்ள தயார் என அறிவித்திருந்த நிலையில், இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து சென்னை, திருப்பூர், பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூரிலிருந்து புறப்படும் பேருந்துகள் இரவு 12 மணிக்கு மேல் நிறுத்தப்படும் என ஓட்டுநர்கள் கறாராக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பயணிகள் அச்சமும், குழப்பமும் அடைந்துள்ளனர். மேலும், திருச்செந்தூரில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான தேர்வுகள் தீவிரமாக நடைபெற்றது. தற்காலிகமாக பணிக்கு வரும் ஓட்டுநர்களை வைத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.