#AFGvSA | தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!
ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடிய குர்பாஸ் 105 ரன்னும், ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தனர்.
பவுமா 38 ரன்னும், டோனி சோர்சி 31 ரன்னும், மார்கிரம் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.