ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
கிழக்கு ஆப்கானிஸ்தானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது. நேற்று (செப்.1) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது. இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானோரின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த 400 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரம்
நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பர்வான், காபூல், கபிசா, மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாயமானவர்களைத் தேடும் பணி, இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் பேரிடர், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் ஒரு சோகத்தைக் கொடுத்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.